அடுத்த லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இந்தக் கூட்டணி அமைய உள்ளது. தி.மு.க., மற்றும் உத்தவ் தாக்கரே கட்சியை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சி ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதற்கிடையே, பிராந்திய கட்சிகளின்கூட்டணியை அமைக்கும் முயற்சியும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது.
சந்திப்பு
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக மற்ற கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேற்று முன்தினம் கோல்கட்டாவில் சந்தித்து பேசினர். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.
இதில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத, தேசிய அளவிலான மூன்றாவது அணியை உருவாக்குவது என்றும், அதற்கு மம்தா பானர்ஜி தலைமை ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது, தேசிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விரைவில் சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் புதுடில்லியில், ஏப்ரல் முதல் வாரத்தில் சந்தித்து, மூன்றாவது கூட்டணியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரில்லை
தி.மு.க., மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே ஆகிய கட்சிகள், காங்கிரசுடனான கூட்டணியை முறிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால், அந்தக் கட்சிகளை தவிர்க்கவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைவதற்கு, பெரும்பாலான பிராந்திய கட்சிகள் விரும்பவில்லை.
அதனால், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்பது பெரிய கேள்விக்குறி.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தன் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்க மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.
அகிலேஷ் யாதவின் ஆதரவு கிடைத்துள்ளதால், மிகுந்த உற்சாகத்துடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்க மம்தா முடிவு செய்துஉள்ளார்.
மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:காங்கிரஸ் இல்லாமல், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முடியாது. தற்போதைக்கு எங்கள் இலக்கு, இந்தாண்டில் நடக்கும் கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவதே. அதன்பிறகே, லோக்சபா தேர்தல் குறித்து யோசிப்போம்.'மூன்றாவது அணி அமைப்போம்; நான்காவது அணி அமைப்போம்' என, பலரும் கூறலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்தால் தான், பா.ஜ.,வை வெல்ல முடியும். அந்த எதிர்க்கட்சி கூட்டணியில், காங்கிரஸ் மையமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர் -