சென்னை: சென்னையின் பிரதான நீர் வழித்தடமாக உள்ள கூவம் நதியின் கரைப் பகுதியில், அடுக்குமாடி கட்டும் திட்டத்துக்கு வழிகாட்டுதல்கள் கேட்டு, நீர்வளத் துறைக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை பெருநகரில் நீர்நிலைகள், நீர் வழித்தடங்களிலும், அதை ஒட்டி, 165 அடி வரையிலும் கட்டுமானத் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.
கடந்த 2015 வெள்ளத்துக்குப் பின், இந்த விஷயத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
குறிப்பாக நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை ஒட்டிய இடங்களில், அதிகபட்ச வெள்ள அளவு என்ன என்பதை, நீர் வளத் துறை குறிப்பிட வேண்டும்.
இருப்பினும், நீர் வழித்தடங்களை ஒட்டி புதிய கட்டுமானத் திட்டங்கள் வருகின்றன.
இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், நீர் வளத் துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பினர்.
கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதாவது:
சென்னை புறவழிச் சாலையில், திருவள்ளூர் மாவட்டம் அடையாளம்பட்டு கிராமத்தில், நான்கு வெவ்வேறு 'சர்வே' எண்களுக்கு உட்பட்ட நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட, தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கல்லுாரி மற்றும் விடுதி பயன்பாட்டுக்காக, ஒன்பது மாடி கட்டடம் கட்ட, தனியார் நிறுவனம்அனுமதி கோரியுள்ளது.
இது தொடர்பான நிலம், கூவம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளதால், அதிகபட்ச வெள்ள மட்டம் மற்றும் அந்த இடத்தில் கட்டடங்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும்.
மேலும், இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், கூவத்தின் எல்லை தொடர்பான விபரங்களை ஒப்பிட்டு, உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த 2015 வெள்ளத்துக்குப் பின், நீர் வழித்தடங்களை ஒட்டிய இடங்களில் பெரிய கட்டுமானத் திட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தான், நீர் வளத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீர் வழித்தடத்துக்கான சர்வே எண், தற்போது இருக்கும் பட்டா போன்ற ஆவணங்கள் அடிப்படையில் முடிவு எடுக்க கூடாது.
நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் தொடர்பான விண்ணப்பங்களில், அந்த நிலம் எப்போது வருவாய்த் துறையால் வகைப்பாடு மாற்றப்பட்டது என்பது போன்ற விஷயங்களை, ஆய்வு செய்ய வேண்டும்.
அவசரப்பட்டு அதிகாரிகள் முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.