திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு வாரமாக, இரவில் அதிக குளிரும், பகலில் அதிக வெப்பமும் நிலவி வந்தது. இந்த பருவ மாற்றம் காரணமாக, வயதானோர், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சில நாட்களாக மாவட்டம் முழுதும், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில், அதிகபட்சமாக, கும்மிடிப்பூண்டியில், 3.7 செ.மீ., மழை பதிவாகியது.
l கும்மிடிப்பூண்டியில், இரு தினங்களாக, மழை பெய்து வருகிறது. நேற்று பகலில், அரை மணி நேரம், அடைமழை பெய்தது.
அப்போது, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 2 - 6 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்பட்டது.
l ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு வந்து பயணியரை ஏற்றிச் செல்கின்றனர்.
சமீபத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில், பேருந்து நிலைய கூரை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டன.
இரு தினங்களாக ஊத்துக்கோட்டை பகுதியில் மழை பெய்து வருகிறது. மழை நீர், பேருந்து நிலையத்தில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
பேருந்து நிலையத்தில் சேரும் மழை நீர் அருகில் உள்ள குளத்திற்கு செல்லும் வகையில் இருந்த நிலையில், குளம் சீரமைக்கும் பணிக்காக இந்த தடம் மூடப்பட்டது.
இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மாவட்டத்தில், அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 3.7 செ.மீ.,யும், குறைந்தபட்சமாக திருத்தணியில் 1 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.