கடமலைக்குண்டு : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில மாதங்களாக மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு மணல் பரப்பாக காட்சியளிக்கிறது. இதனால் குடிநீர், பாசனத்திற்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள மேகமலை, அரசரடி, கோம்பைத்தொழு, வெள்ளிமலை பகுதியில் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து வாலிப்பாறை, வருஷநாடு மலையில் மூல வைகை ஆறாக மாறுகிறது.
உப்புத்துறை யானை கெஜம் பகுதியில் இருந்து வரும் நீரும் மூல வைகை ஆற்றில் இணைந்து, வருஷநாடு, தும்மக்குண்டு, முறுக்கோடை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேர்கிறது.
மலைப்பகுதியில் சில மாதங்களாக மழை இல்லை. கோடை துவங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இதனால் நீர் வரத்து படிப்படியாக குறைந்து தற்போது மூலவைகை ஆறு வறண்டு மணல் பரப்பாகி விட்டது. கடமலைக்குண்டு - - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் நீர் குடிநீராக விநியோகிக்கப்படுகின்றது.
ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் உறை கிணறுகள், கரையோரங்களில் விவசாயக் கிணறுகள், 'போர்வெல்'களிலும் நீர் சுரப்பு குறைந்து விட்டது. இதனால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: கோடை மழைக்கு பின் மீண்டும் மூல வைகை ஆற்றில் நீர் வரத்துக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால் கோடையில் இந்த ஆற்றின் நீர்வரத்து பல கி.மீ., தூரம் உள்ள மணல் பரப்பை கடந்து வைகை அணைக்கு சென்று சேர்வது சிரமம், என்றனர்.