பெரம்பலுார்: பொதுமக்களிடையே மத மோதல்களை துாண்டி விட்டதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அரியலுார் மாவட்டச் செயலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலுார், கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த முத்துவேல், 39, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலராக உள்ளார்.
அரியலுாரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத்தந்தை டோமினிக் சாவியோ, 54, என்பவரை மிரட்டி, 25 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற வழக்கில், முத்துவேல் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
ஏற்கனவே, கிறிஸ்துவ மத போதகர்களை மிரட்டியது; எஸ்.பி., குறித்து அவதுாறு பரப்பியது; வி.சி., தலைவர் திருமாவளவன் குறித்து, முகநுாலில் அவதுாறு பரப்பியது என, மாவட்டத்தில் பல போலீஸ் ஸ்டேஷன்களில், முத்துவேல் மீது, 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து மக்களிடையே மத மோதல்களை துாண்டி விடுவதால், மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரைப்படி, முத்துவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
அதன்படி, முத்துவேலை, குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை, போலீசார், நேற்று திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.