பழவேற்காடு: பழவேற்காடு -- பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில், கழிமுகப் பகுதிகளில், மூன்று சிறுபாலங்கள் உள்ளன. இதில், பழவேற்காடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறு பாலம் கட்டப்பட்டு, 70 ஆண்டுகள் ஆகிறது.
இதன் துாண்கள், பக்கவாட்டுச் சுவர்கள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தன.
சேதம் அடைந்து கிடக்கும் மேற்கண்ட பாலத்தின் அருகே, பழவேற்காடு -- பசியாவரம் இடையே, ஏரியின் குறுக்கே, 18 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் கடந்த, 2021ல் தொடங்கி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பழவேற்காடு- - பசியாவரம் பாலத்திற்கு அருகில், சேதம் அடைந்து கிடக்கும், மேற்கண்ட பழைய பாலத்தினை இடித்துவிட்டு, அங்கு புதியதும் கட்டப்பட உள்ளது.
இதற்காக, பொன்னேரி -- பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இரு தினங்களாக சேதமடைந்த சிறு பாலத்தினை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழவேற்காடு -- பசியாவரம் பாலப்பணிகளுடன், மேற்கண்ட சிறுபாலப் பணிகளையும் துரிதமாக முடித்து, இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
Advertisement