திருச்செந்துார் : திருச்செந்துார் கடலில் வீசப்பட்ட சேதமுற்ற சிலைகளை மீண்டும் எடுத்துவைத்து ஆகம விதிக்கு மாறாக வழிபடுவதை தவிர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோயில்களில் வழிபாட்டில் இருந்த சிலைகள் உடைந்து போனாலும்,சிலைகள் செய்யும் சிற்ப கூடங்களில் சேதம் ஏற்பட்டாலோ ஆகம சாஸ்திரப்படி அவற்றை வழிபடக் கூடாது. இதனால் இவ்வாறு சேதமுற்ற சிலைகளை நீர் நிலைகளில் வீசுவது வழக்கமாக உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பாக கடற்கரையில் அவ்வாறு வீசப்பட்ட சேதமுற்ற சிலைகள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கும் போது வெளியே தெரிகின்றன.
பக்தி மிகுதியால் பக்தர்கள் சிலர் அதனை மீண்டும் தூக்கி வந்து கடற்கரை மணலில் வைத்து வழிபாடு செய்கின்றனர். தற்போது பைரவர், நாகர், நந்தி, விநாயகர் ,அம்மன் என பல்வேறு சிலைகள் இவ்வாறு கடற்கரை மணலில் வைக்கப்பட்டுள்ளன.
ஆகம விதிக்கு எதிரான இந்த வழிபாட்டை தடுக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த அந்த சிலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.