கருமத்தம்பட்டி:கணபதிபாளையம் கிராமத்தில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது கணபதிபாளையம் கிராமம். இங்கு, சில நாட்களாக மர்ம விலங்கின் நடமாட்டத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன், மர்மமான முறையில் இரு ஆடுகள் இறந்து கிடந்தன. பொன்னுசாமி என்பவரது வீட்டில் உள்ள மாட்டை, மர்ம விலங்கு தாக்கியுள்ளது.
மர்ம விலங்கு உலவுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், சிறுத்தையா அல்லது வேறு விலங்கா என்பதை கண்டறிய, இரு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் மான்கள் அதிகளவில் உள்ளன. ஊருக்குள் நடமாடுவது சிறுத்தையாக இருக்குமோ என்று அச்சமாக உள்ளது.
ஆடு, மாடுகளை தாக்கியுள்ளது. இரவில் வெளியில் நடமாட பயமாக உள்ளது. உடனடியாக, வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.