ராமநாதபுரம்: பரமக்குடி தனியார் நிதி நிறுவனத்தில், 1,646 கிராம் தங்க நகைகளை அடகு வைத்தது போல, போலி ஆவணங்கள் தயாரித்து, 60 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, பணியாளர்கள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சின்னகடை வீதியில் உள்ள, 'இன்டல் மணி லிமிடெட்'டில் பிப்., 2ல் நிதிநிலை தணிக்கை நடந்தது. அப்போது, 23 வாடிக்கையாளர்கள் பெயரில், 1,646 கிராம் தங்க நகைகளை அடகு வைத்தது போல, போலி ஆவணங்களை தயார் செய்து, 60 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது தெரிந்தது.
மேலும், எமனேஸ்வரம் ஜீவஜோதி, பரமக்குடி உஷாராணி, பிரசன்னா, பொட்டிதட்டி தாமோதரன், விருதுநகர் மாவட்டம், இளவனுார் ராமர் ஆகியோர் கையாடலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, 7.89 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தினர்.
எனினும், பணியாளர்கள் ஐந்து பேர் மீது, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.