மேட்டுப்பாளையம்:சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அதனால் ஏல மண்டிக்கு, 6,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வந்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுார், பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், வாழை பயிர் செய்துள்ளனர்.
கடந்த வாரம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் சிறுமுகை, பெத்திக்குட்டை, இரும்பறை, இலுப்பநத்தம் ஆகிய பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றால், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதன் வாழைத்தார்களை விவசாயிகள் அறுவடை செய்து, தனியார் ஏல மண்டிக்கு கொண்டு வந்தனர். விலை மிகவும் குறைவாக ஏலம் போனதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது குறித்து வாழைத்தார் ஏல மண்டி உரிமையாளர்கள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த ஏலத்தில் மொத்தமாக, 2,000 வாழைத்தார்கள் மட்டுமே, விற்பனைக்கு வந்திருந்தன.
அதனால் நேந்திரன் ஒரு கிலோ, 20 ரூபாய்க்கும், கதளி ஒரு கிலோ, 46 ரூபாய்க்கும் மற்ற வாழைத்தார்கள் அதிகபட்சம் பூவன், 550, ரஸ்தாலி, 500, செவ்வாழை, 800, தேன் வாழை, 650, ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் சூறாவளி காற்றால், ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் நடுத்தரமான மற்றும் பிஞ்சு காய்களை விவசாயிகள் அறுவடை செய்து, இன்று (நேற்று) மொத்தமாக, 6,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தேவைக்கு அதிகமான தார்கள் வந்ததாலும், முதிர்ச்சி அடையாத காய்கள் என்பதாலும், வியாபாரிகள் விலையை குறைத்து கேட்டனர்.
அதிகபட்சமாக நேந்திரன் ஒரு கிலோ, 15 ரூபாய்க்கும், கதளி, 35 ரூபாய்க்கும் ஏலம் போனது. மீதமுள்ள வாழைத்தார்கள் பூவன், 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 350, செவ்வாழை, தேன் வாழை, 450 ரூபாய்க்கும் ஏலம் போனது.
தார்களின் எண்ணிக்கை அதிகமாக வந்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement