குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வழிவகை செய்யவேண்டும், என, விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோமனுார்:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயமும், விசைத்தறி தொழிலும் பிரதானமாக உள்ளது. 2.5 லட்சம் விசைத்தறிகள் இரு மாவட்டத்திலும் இயங்குகின்றன. கூலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படும் விசைத்தறி தொழிலில், பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
வீழ்ச்சியில் உள்ள ஜவுளி மார்க்கெட் , ஆட்கள் பற்றாக்குறை, மின் கட்டணம், டீசல், உதிரி பாகங்கள் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறி, ஜவுளி தொழில் நெருக்கடியில் சிக்கி தவித்தது.
மின் கட்டணம் உயர்வு
இந்நிலையில், கடந்த செப்., மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ. 1.50 உயரத்தப்பட்டதால் விசைத்தறியாளர்கள் அதிரச்சி அடைந்தனர். மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மின் வாரியத்துக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் தேக்கமடைந்தது.
மின் கட்டணத்தை குறைக்க, விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்தது. வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டகோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.
கூடுதல் கட்டணம்
கடந்த செப்., முதல் ஒவ்வொரு விசைத்தறி கூடத்துக்கும் மூன்று முதல் நான்கு மின் கட்டண பில்கள் வந்துள்ளன. அவை உயர்த்தப்பட்ட மின் கட்டண விகிதப்படி உள்ளது.
அதனால், விசைத்தறியாளர்கள், 40 ஆயிரம் ரூபாய் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தமாக அவ்வளவு தொகையை திரட்டி மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பெரும்பான்மையான விசைத்தறியாளர்கள் இருந்தனர்.
ஒரு வழியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், விசைத்தறிக்கான மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைத்தும், 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 1000 யூனிட்டாகவும் உயர்த்தி சலுகையும் அரசு வழங்கியது. இதனால் விசைத்தறியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
மின் கட்டண குறைப்பும், இலவச மின்சார சலுகையும் கிடைத்ததால் விசைத்தறியாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.
விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 11 ம் தேதி கருமத்தம்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி நன்றியும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கட்டண குறைப்பு அறிவிப்பு, கடந்த ஆறு மாதங்களுக்கும் பொருந்துமா அல்லது மார்ச் மாதம் முதல் தான் நடைமுறைக்கு வருமா என்ற குழப்பம் விசைத்தறியாளர்கள் மத்தியில் உள்ளது. இது குறித்து அரசு தெளிவு படுத்துவதோடு, தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விசைத்தறியாளர்கள் விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக மின் வாரிய உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஓரிரு நாட்களில் மின் துறை அமைச்சரை சந்தித்து, கட்டணத்தை செலுத்த சலுகை அளிக்க வேண்டும், என, வலியுறுத்த விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.