ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் வனத்துறையினர் விட்ட 335 ஆமை குஞ்சுகளில் சிலவற்றை செம்பருந்துகள் கவ்வி சென்றன.
மன்னார் வளைகுடா கடலில் வாழும் அலுங்காமை, சித்தாமை, தோணி ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் வரை முகாமிடும். இங்குள்ள கடற்கரையில் ஆமைகள் மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இதனை வனத்துறையினர் சேகரித்து முகுந்தராயர்
சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள் முட்டைகளை மணலில் புதைத்த பின் 50 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சுகள் குழியில் இருந்து வெளியேறும்.
அதன்படி 5 குழிகளில் இருந்த 624 முட்டைகளில் நேற்று 335 ஆமை குஞ்சுகள் பொரித்து வெளியே வந்தன. இதனை மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வேட்டை தடுப்பு காவலர்கள் சேகரித்து தனுஷ்கோடி கடலில் விட்டனர்.
அப்போது வானில் வட்டமடித்த செம்பருந்துகள் சில குஞ்சுகளை லாவகமாக கவ்வி சென்றன. சுதாரித்த வனத்துறையினர் அவை மேலும் தூக்கி செல்லாதபடி சத்தமிட்டனர்.
இதுவரை 127 ஆமைகள் இட்டு சென்ற 14,020 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.
இதில் 20 குழியில் பொரித்த 2143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.