அந்தியூர் : ஈரோடு மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றால், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமாயின.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே புதுக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், புதுக்காடு, விலாங்குட்டை, காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஐந்துக்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் முறிந்தன.
புதுக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அப்பகுதிக்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள், கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஈரோடு மாவட்டம் நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளான கரட்டுப்பாளையம், குருமந்துார், காரப்பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வீசிய சூறாவளி காற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில், 50 ஏக்கருக்கு மேல் பூவன், தேன் வாழை, செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட வாழை மரங்களை பயிரிட்டுள்ளோம்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியதால், இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
இப்பகுதி விவசாயிகளுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது; அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement