திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 2020ல், சட்டசபையில், 110 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பாற்கடலில் இருந்து நீர் உறிஞ்சி, கிணறுகள் அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என அப்போதைய முதல்வர் அறிவித்து, அதற்கான பணிகள் துவங்கப்பட்டன.
மொத்தம், 86 கி.மீ., துாரம் பகிர்மான குழாய்கள் அமைத்து, திருத்தணி நகர மக்களுக்கு தினமும், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வழங்க, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் அதே ஆண்டில் துவங்கப்பட்டன.
கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திருத்தணி, சேகர்வர்மா நகரில் 3.95 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர் ஊந்து நிலையம், இந்திரா நகர் பகுதியில் 10.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன.
ஆனால், திருத்தணி அடுத்த, மாம்பாக்கம் -- கன்னிகாபுரம் இடையே 1.5 கி.மீ., துாரம் வனப்பகுதியில் மட்டும் ராட்சத குழாய்கள் புதைப்பதற்கு வனத்துறை அனுமதி கிடைக்காததால் பல மாதங்களாக கூட்டுக் குடிநீர் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன் வனப்பகுதியில் குழாய்கள் புதைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்தன..
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதியில் குழாய் புதைப்பதற்கு அனுமதி கிடைக்காததால், கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வு ஏற்பட்டு இருந்தது.
தற்போது அனுமதி கிடைத்ததால் குழாய் பதிக்கும் பணிகள் இரவு, பகலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்னும், 15 நாட்களில் குழாய்கள் புதைக்கும் பணி முடிந்து, அடுத்த மாதத்திற்குள் திருத்தணி நகராட்சிக்கு கூட்டுக் குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.