உடுமலை:திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமைவகித்தார்.
கண், காது மூக்கு தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில், புதிதாக 37 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு, வயது வரம்பு தளர்த்தி, மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இம்முகாமில் எளிதாக பங்கேற்று, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் சக் ஷம் அமைப்பு, பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை வாயிலாக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை இயக்குகிறது.