மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோதி, 56. இவரது மகன் மணிகுமார், 33.
நேற்று காலை ஜோதியும், அவரது மகனும், சென்னை எண்ணுாரில், உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
மீஞ்சூர் அடுத்த, வல்லுார் அருகே சென்றபோது, பின்னால் வந்த 'டாடா டாரஸ்' லாரி, மணிகுமார் ஓட்டிச் சென்ற 'யமஹா பைக்' மீது மோதியது.
இதில் தாய், மகன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். ஜோதி தலையில் காயம் அடைந்ததில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து, ஆபத்தான நிலையில் இருந்த மணிகுமாரை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோதியின் சடலத்தை கைப்பற்றி, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.