உடுமலை:பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோவின் சார்பில், இளம் விஞ்ஞானி பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்கான, இஸ்ரோவின் 'யுவிகா' எனப்படும் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பாக, ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு, இந்த இலவச சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதன் வாயிலாக, பள்ளி மாணவர்கள், தங்களது அறிவியல் திறனை வெளிப்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.
இந்த முகாமில், மாணவர்களுக்கான செயல்விளக்க பயிற்சி, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
மாநில அளவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தலா இரண்டு பேர் வீதம் தான் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்களுக்கான முகாம், மே 15 முதல் 26ம்தேதி வரை நடக்கிறது. இந்த மாணவர்கள் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு யு.ஆர்., செயற்கைகோள் மையம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி நிறுவனம், உட்பட ஏழு மையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
ஆர்வமுள்ள மாணவர்கள், https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் மார்ச் 20 முதல் ஏப்., 3 வரை விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முதல்கட்ட பட்டியல் ஏப்., 10ல், இரண்டாம் கட்ட பட்டியல் ஏப்., 20ல் வெளியிடப்படுகிறது.
பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும், கூடுதல் தகவல் பெறவும் கலிலியோ அறிவியல் கழகம் 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சியில், ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.