திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சிக்குட்பட்ட மூலமத்துார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததால், கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து மூன்று மாதத்திற்கு மாவட்ட கலெக்டர், மூலமத்துார் கிராமத்திற்கு நேரில் வந்து தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, 28.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
ஆனால், பள்ளிக் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்படாமல் காலதாமதம் ஆகிறது. இதற்கு காரணம், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கட்டடம்.
இந்த கட்டடம் பழுதடைந்துள்ளதால், திருத்தணி ஒன்றிய நிர்வாகம், கடந்த மாதம் இடிப்பதற்கு, 18 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் இதுவரை சமையல் அறை கட்டடம் இடிக்கப்படாததால் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கட்டடம் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளியில் மாணவர்கள் படிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து புதிய பள்ளி கட்டட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.