- நமது நிருபர் -
திருவாலங்காடு ஒன்றியத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா, போதை பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தி தடை செய்ய தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், காவல் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாலங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் பல்வேறு பகுதிகளில் தாராளமாக கிடைத்து வருகிறது.
இதில், திருவாலங்காடு தேரடி, சின்னம்மாபேட்டை ரயில் நிலையப் பகுதி, தொழுதாவூர், மணவூர், அரிசந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து எந்த இடையூறும் இன்றி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிராம் கஞ்சா, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் வெளியூரைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் கஞ்சாவை வாங்கி செல்ல இரவு, பகலாக சுற்றித் திரிகின்றனர்.
இவர்கள் கஞ்சா போதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் சண்டையிடுவதும், அவர்களுக்குள்ளாக பொது இடங்களில் தாக்கி கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.
கடந்த 10 நாட்களில், 8 முறை சின்னம்மாபேட்டை ஜங்ஷன் பகுதியில் கஞ்சா போதை இளைஞர்கள் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதேநிலை நீடித்தால் இப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி விடும் சூழல் உள்ளது.
தமிழக அரசு கஞ்சா, குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும் மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா தாராளமாக கிடைப்பதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி., செபாஸ் கல்யாண் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.