லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில், உள்கட்சி குழப்பம், பதவிக்கு ஆபத்து உட்பட பல்வேறு காரணங்களால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
தலைவலி
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற பின், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, கோவை கார் குண்டு வெடிப்பு, கவர்னருடன் மோதல், வெளி மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் என, ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
இது தவிர, அமைச்சர்கள் மற்றும் கட்சியினர், பொது இடங்களில் பேசும் சர்ச்சை பேச்சு, உட்கட்சி மோதல் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டி உள்ளது.
சமீபத்தில் அமைச்சர் நேரு - எம்.பி., சிவா ஆதரவாளர்கள் மோதிக் கொண்டது, பெரும் தலைவலியை தந்துள்ளது.
தற்போதுள்ள கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம், பா.ம.க., போன்றவற்றை இணைத்தால், லோக்சபா தேர்தலில், அவற்றுக்கு இடங்கள் ஒதுக்குவது, பிற கட்சிகளுக்கு இடங்களை குறைத்தால், அவை வெளியேறாமல் தடுப்பது போன்ற பணிகள் உள்ளன. இதனால் கட்சி, ஆட்சி என, இரண்டிலும் முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச் செயலர் தேர்தலை அறிவித்து, கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி கட்சியான பா.ஜ., உடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதல், அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் நிலையில், பா.ஜ.,வை ஒதுக்கினால், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, பா.ஜ.வை கழற்றி விடலாமா, வேண்டாமா என்றே முடிவெடுக்க முடியாத நிலை.
பன்னீர்செல்வத்தை நீக்கியதால், தென் மாவட்டங்களில் ஏற்படும் ஓட்டு இழப்பை சரிசெய்ய, என்ன செய்வது என்பதும் தெரியாத நிலை. எனவே, பல விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறார். பா.ஜ.,வை நம்பலாமா; தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்படலாமா என, முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்.
தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அவரது கட்சி சீனியர்களாலே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கட்சி சீனியர்களை ஓரம் கட்ட, அவர் கையாண்ட வழிமுறைகள், அவரது பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, அனைவரையும் சமாளித்து, மேலிடத்துக்கு விளக்கம் அளித்து, தன் பதவியை காப்பாற்றி, லோக்சபா தேர்தலுக்கு கட்சியை முன்னெடுத்து செல்வது, அவருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இது தவிர, அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது பா.ஜ., தலைமையில் தனி அணி அமைப்பதா என முடிவெடுக்க முடியாத நிலை. இதனால், அவரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், அண்ணாமலை ஆக்ரோஷம் காட்டினார். 'என் முடிவை மே 10க்கு பின் அறிவிப்பேன்' என்று, புதிரும் போட்டார்.
தலையெழுத்து
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பதவி காலம் முடிய உள்ளது. கட்சி தலைமை பதவி நீட்டிப்பு வழங்குமா அல்லது பறிக்குமா, தன்னை தொடர தி.மு.க., அனுமதிக்குமா என்ற கவலை அவருக்கு உள்ளது.
வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, தி.மு.க., கூட்டணியில் தொடருவோமா அல்லது அ.தி.மு.க., கூட்டணிக்கு மாறுவோமா என்ற ஊசலாட்டம்.
பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாத நிலை.
இப்படி ஒவ்வொருவரும், பல்வேறு வகையான பிரச்னைகளால், நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
தலைவர்களே பல பிரச்னைகளில் முடிவெடுக்க முடியாமல் திணறுவதால், தொண்டர்களும் குழப்பத்திலேயே உள்ளனர். ஆனாலும், தமிழகத்தின் தலையெழுத்து என்னவோ, இவர்களை சுற்றித் தான் உள்ளது.
- நமது நிருபர் -