வயலுார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலுார் ஊராட்சியில், வயலுார், சூரகாபுரம், உச்சிமேடு, மும்முடிக்குப்பம், அகரம் ஆகிய கிராமங்களில், ஒன்பது வார்டுகள் உள்ளன.
இங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் அடிப்படை மருத்துவ வசதிக்கு அவதிப்படுகின்றனர்.
ஏனெனில், மக்கள் தங்கள் அடிப்படை மருத்துவ வசதிக்குக்கூட இங்கிருந்து, 7 கி.மீ., துாரமுள்ள உளுந்தை கிராமத்திற்கு செல்ல வேண்டும் அல்லது, 15 கி.மீ., துாரமுள்ள, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுங்குவார்சத்திரம் செல்ல வேண்டும்.
இதனால், நேரம் மற்றும் பணம் விரயம் ஏற்படுவதோடு, சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது.
எனவே, கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மேலும், ஊராட்சி பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல், மிகவும் சேதமடைந்து, பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால், பெண்கள் அவதிப்படுகின்றனர்.
இதே போல், ஊராட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு, மின் இணைப்பு, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், இதுவரை பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.
இதனால், மக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு, தனியார் மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பயன்பாடில்லாத சமுதாய கூடம், தற்போது கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடில்லாத சமுதாய கூடம், 2014-15ம் ஆண்டு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெயரளவிற்கு வண்ணம் பூசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோய் பரவம் அச்சம்
ஊராட்சி பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே உள்ள, 30 ஆண்டுகளுக்கு முன், மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் வயலுார் ஊராட்சியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''வயலுார் ஊராட்சியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூறினார்.