காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு என்.எஸ்.கே., நகரில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழை நீர் வெளியேறவும், வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற்றவும் மழை நீர் வடிய வடிகால்வாய் இல்லை.
இதனால், வீட்டில் போதுமான இடவசதி உள்ளவர்கள் தோட்டம் அமைத்து, வீட்டு உபயோக கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இடவசதி இல்லாதவர்கள் வீதியிலும், அப்பகுதியில் காலியாக உள்ள வீட்டு மனைகளிலும் கழிவு நீரை விட்டு வந்தனர்.
காலி மனையில் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் வழிந்தோடுவதால், இப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
எனவே, மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், திருக்காலிமேடு என்.எஸ்.கே., நகரில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.