உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியப்பேட்டை கிராமம். இப்பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை சார்பில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
இக்கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது, மேற்தளம் மற்றும் சுவர்கள் மிகவும் சேதம் அடைந்து, சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து காணப்படுகின்றன.
இதனால், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள், பழுதான கட்டடத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
மேலும், மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் நீர் சொட்டுவதால், அரசு சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமம் உள்ளதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.