புதுடில்லி : ஸ்ரீநகரில் நடந்த ஒற்றுமை யாத்திரையின்போது, 'இப்போதும் இங்கு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்' என, பேசியது தொடர்பாக விபரம் கேட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வீட்டுக்கு போலீசார் சென்றனர். இது புதுடில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரையை சமீபத்தில் மேற்கொண்டார்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த பாதயாத்திரையின்போது, 'இப்போதும் இங்கு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்' என, ராகுல் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வெளியான செய்திகள், சமூக வலைதள செய்திகளின் அடிப்படையில் புதுடில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் கருத்துக்கு, ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கும்படி, 16ம் தேதி அவருக்கு புதுடில்லி போலீசார், 'சம்மன்' அனுப்பினர்.
அதில், 'புகார் கூறிய பெண்கள் குறித்த விபரங்களை அளித்தால், அவர்களது புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு ராகுலிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இதையடுத்து, புதுடில்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீசார், புதுடில்லியில் உள்ள ராகுலின் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். ஒரு மணி நேரம் காத்திருந்த அவர்களை, ராகுல் சந்தித்தார்.
அதன்பின், மற்றொரு சம்மன் அளித்துவிட்டு போலீசார் திரும்பினர். அதன் பின், தன் வீட்டில் இருந்து ராகுல் வெளியே சென்றனர்.
ராகுல் வீட்டுக்கு போலீசார் வந்த தகவலையடுத்து, அங்கு நுாற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் திரண்டனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் அங்கு விரைந்தனர்.
இது குறித்து, புதுடில்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா கூறியதாவது: நீண்ட நாட்கள் யாத்திரை நடந்ததால், சரியாக நினைவில்லை என்று ராகுல் குறிப்பிட்டார். தான் கூறிய கருத்து தொடர்பான தகவல்களை திரட்டித் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் மற்றொரு சம்மன் கொடுத்துள்ளோம். தேவைப்பட்டால், அவரிடம் நேரடியாக விசாரிப்பது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: பாரத ஒற்றுமை யாத்திரை, லட்சக்கணக்கான பெண்கள் சுதந்திரமாக, தங்களுடைய கருத்தை தெரிவிக்கும் தளமாக அமைந்துள்ளது.
தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வருவதால், பழிவாங்கும் நோக்கோடு, இந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, வெட்கக்கேடானது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன் மீதான போலீசாரின் நட வடிக்கை, முன் எப்போதும் இல்லாதது என ராகுல் பதில் அளித்துள்ளார்.