பந்தலுார்:மாநிலம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், எழுத்தறிவு இல்லாத, 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு தன்னார்வலர்கள் மூலம் எழுத்தறிவுக்கும் பயிற்சி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு அனைத்து பயிற்சி மையங்களிலும் நேற்று நடந்தது.
அதில், பந்தலுார் அருகே பென்னை அரசு துவக்க பள்ளியில் நடந்த தேர்வில், 11 பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுத வந்த பழங்குடியின மக்களை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்று பேசுகையில்,''பழங்குடியின முதியவர்கள் தேர்வு எழுதுவதை பார்க்கும் பழங்குடியினர் இளைஞர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் செலுத்தி, தங்கள் தலைமுறையை மேம்படுத்த முன்வர வேண்டும்,'' என்றார். தன்னார்வலர் ஷெரின் தேர்வை நடத்தினார். ஆர்வத்துடன் தேர்வு எழுதிய முதியவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.