ஊட்டி:நீலகிரியில், 60 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
நம் மாநிலத்தில் 'இன்புளூயன்சா--ஏ' வகை வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக, 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரியில், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில், 60 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
தவிர, ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலமும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் பொது சுகாதார துறை மூலம் ஏராளமான களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிலும் மருத்துவ குழுவினர் குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றார்.
நீலகிரி சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால், வெளி மாவட்டம், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் சுற்றுலா ஸ்தலங்களில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் கண்டறியும் முகாமில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''நீலகிரியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம், 60 இடங்களில் நடந்து வருகிறது. சுற்றுலா ஸ்தலங்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனையும் நடந்து வருகிறது. பாதிப்பு கண்டறிந்தால் இப்போதைக்கு வீட்டில் தனிப்படுத்துகின்றனர். மாவட்டத்தில் அந்தந்த அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.