சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க, இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கையை தொடர அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் வரும் 24ல் இறுதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யும்படி, பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கில், எந்த இறுதி தீர்ப்பும் வெளியாகாத நிலையில், பொதுச்செயலர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடத்தப்படும் என, பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அப்பதவிக்கு பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செயதார்.
இந்நிலையில், பொதுச்செயலர் தேர்தலுக்கு தடை கோரி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விடுமுறை தினமான நேற்று, இந்த மனு, நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
தவறாக பயன்படுத்துவதா?
அப்போது, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர், ஸ்ரீராம் ஆகியோர் வாதாடியதாவது: பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று விட்டு, மாலையில் பொதுச்செயலர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்று விட்டது எனக்கூறி, பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படலாம். எனவே, தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது.
வாக்காளர் பட்டியல்
நிரந்தர பொதுச் செயலராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு, தற்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவே, கட்சியின் நிரந்தர பொதுச்செயலராக இருக்க வேண்டும் என்பது, மக்களின் விருப்பம். தேர்தல் கமிஷன், இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதங்களை அனுப்புகிறது.
பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியை திருத்தியதன் வாயிலாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூறியதன் வாயிலாகவும், மற்றவர்கள் போட்டியிட விடாமல் தடுக்கப்பட்டு உள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா; பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது, பொதுச் செயலர் தேர்தலை அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன?
ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளதால், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் செல்லாததாகி விடும். இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
தடை கூடாது
அ.தி.மு.க., மற்றும் பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆஜராகி வாதாடியதாவது: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலில், இதற்கு முன் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை தான், தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறைப்படி நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுச் செயலர் தேர்தல், 1.5 கோடி உறுப்பினர்கள் வாயிலாக நடத்தப்பட உள்ளது. இவர்களில், ஒரு சதவீதம் பேர் கூட, பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. உட்கட்சி விவகாரங்களில், நீதிமன்றம் தலையிடக் கூடாது.
தேர்தல் நடைமுறை துவங்கி விட்டால், நீதிமன்றம் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைமுக மனுதாரர்களாக உள்ள மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், இவ்வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, எட்டு மாதங்களுக்கு பின் தீர்மானங்களை எதிர்த்து, வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை, 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அமலுக்கு வந்து விட்டன.
இந்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது எனக்கூறி, பொதுச் செயலர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோர முடியாது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர்.
அசாதாரண சூழலில், கட்சி எதிர்காலம் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது. கட்சி செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம்; சூழ்நிலைகள் மாறியதால், தற்போது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பொதுக்குழு உறுப்பினர்களில், 2,501 பேர் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, பொதுச் செயலர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'பொதுச்செயலர் பதவியை மீண்டும் கொண்டு வரும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது. அந்த வழக்கு, ஏப்ரல், 11க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
அந்த வழக்கு முன்கூட்டியே, அதாவது வரும், 22ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். அன்று தேர்தலுக்கு தடை கோரும் இந்த வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, 24ல் தீர்ப்பு பிறப்பிக்கப்படும். அதுவரை, பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது. ஆனால், தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல், 26ம் தேதி நடக்கும் என, அக்கட்சி அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் வரை, பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆதரவாக, 221 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஏற்கனவே அறிவித்தபடி, நேற்று மாலை, 3:00 மணிக்கு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதும், போட்டியின்றி பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் தயாராக இருந்தனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், பட்டாசு, இனிப்பு, பொன்னாடை எல்லாம் வாங்கி வைத்திருந்தனர். ஆனால், பொதுச்செயலர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், பொதுச்செயலர் தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பழனிசாமி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எந்த கொண்டாட்டமும் இல்லாமல் கலைந்து சென்றனர்.