சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 387 கி.மீ., துாரத்தில், 471 பேருந்து சாலைகள் மற்றும் 5,270 கி.மீ., நீளம் உடைய, 34 ஆயிரத்து, 640 உட்புற சாலைகள் உள்ளன.
சாலையோரம், சாலை மையத் தடுப்புகளின் ஓரங்களில், மெல்லிய மணல், புழுதி படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். வடிகால் அடைப்புக்கு காரணமாகவும் இருக்கும்.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், இரவு நேரங்களில், 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களால், துாய்மை பணி நடக்கின்றன.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மண்டலத்திலும், நாளொன்றுக்கு சராசரி 25 முதல் 30 கி.மீ., வரை சுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில், பிப்., 16ம் முதல் மார்ச் 15ம் தேதி வரை, 333 இடங்களில் உள்ள மணல் மற்றும் புழுதி அகற்றப்பட்டு உள்ளன.
பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில், மணல் துாசிகள் அதிகளவில் காணப்பட்டால், மாநகராட்சியின், 1913 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.