மேட்டுப்பாளையம்:வரும் கல்வி ஆண்டில், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் முடிவு செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகரில் ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 1980ம் ஆண்டில் எட்டாம் வகுப்பு படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், காரமடை காந்திநகர் அருகே, தனியார் மண்டபத்தில் நடந்தது. அந்த ஆண்டு எட்டாம் வகுப்பில், 70 மாணவ, மாணவியர் படித்தனர்.
இவர்கள் திருமணம் ஆகி சேலம், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் குடியிருந்து வருகின்றனர். இவர்களை ஒன்றிணைத்து, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
காளிமுத்து, கோபால், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர், தன்னுடன் படித்து வெளியூரில் உள்ள, ஒவ்வொருவரையும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். பின்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர். இதை அடுத்து நேற்று காரமடை அருகே தனியார் மண்டபத்தில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், 58 முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அவர்கள் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வரும் கல்வியாண்டில், ஜி.எம்.ஆர்.சி. பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி செய்ய, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.