நங்கநல்லுார்: குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், பி.பி.ஜெயின் மருத்துவமனை மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, நங்கநல்லுார், ராம்நகர், நீலகண்டா காம்ப்ளக்சில் நேற்று, இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடத்தின.
மொத்தம், 200க்கும் மேற்பட்டோருக்கு, அருணா டயாபெட்டிக் சென்டர் வழியாக, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நான்கு பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களுக்கு, மருத்துவர் பன்னீர்செல்வம், உரிய சிகிச்சை பரிந்துரை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார். சமூக ஆர்வலர் அப்துல்காதர், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைவருக்கும், காலை உணவு வழங்கப்பட்டது.
மேலும், 120 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஐந்து பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், சங்கரா கண் மருத்துவமனைக்கு, உடனே அழைத்து செல்லப்பட்டனர். இன்று, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இம்முகாமில், சங்கரா மருத்துவமனை டிரஸ்டி ஸ்ரீராமன், மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.