சென்னை: தீ விபத்து நேரிடும்போது, தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபடுவதில், தீயணைப்பு துறை முக்கிய பங்காற்றுகிறது. சென்னையில், 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
தென் சென்னையில் 12, மத்திய சென்னையில் 11, வட சென்னையில் 9 மற்றும் புறநகர் பகுதியில், 10 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
ஒவ்வொரு நிலையத்திலும், 4,500, 8,000, 9,000 மற்றும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய 45 தீயணைப்பு லாரிகள் உள்ளன. இந்த லாரிகளுக்கு, குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்குகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள, நீரேற்று நிலையங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்படும். இதற்கான, கட்டணம் வாரியம் வசூலிப்பதில்லை. நீரேற்று நிலைய குழாய்கள் கையால் இயக்கும் வகையில் இருந்தன.
மோசடியை தடுத்து, எவ்வளவு குடிநீர் வெளியே செல்கிறது என கணக்கீடு செய்ய, கடந்த ஆண்டு, 'ஸ்கேன்' செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதை வைத்து, பொதுமக்களுக்கு லாரி குடிநீர் வழங்கி, கணக்கீடு செய்யப்படுகிறது.
ஆனால், தீயணைப்பு லாரிகளுக்கு, 'ஸ்கேன்' செய்ய கார்டு வழங்கவில்லை. ஒவ்வொரு முறையும், நீரேற்று நிலைய பொறியாளரிடம் கேட்டு, அவர் ஒப்புதல் அளித்தபின், தீயணைப்பு லாரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதனால், தீ விபத்தை தடுப்பதில் சிக்கல் ஏற்படும் என, தீயணைப்பு படையினர் கூறுகின்றனர்.
தீயணைப்பு படையினர் கூறியதாவது:
உயிர் காக்கும் கருவியாகத் தான், தீயணைப்பு லாரிகள் இயங்குகின்றன. கடந்த ஆண்டு வரை, நீரேற்று நிலையங்களில் தடையில்லாமல் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது, மேல் அதிகாரிகளிடம் கேட்டு தான் வழங்குகின்றனர்.
இரவு நேரத்தில், பல நீரேற்று நிலையங்களில் தண்ணீர் வழங்குவதில்லை. இரவு தீ விபத்து நேரிட்டால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும்.
தீயணைப்பு லாரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தடையில்லாமல் தண்ணீர் வழங்க, குடிநீர் வாரியம் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement