மணலிபுதுநகர்: 'கொசஸ்தலை ஆற்றின் உபரி நீர் கால்வாயின் உயரத்திற்கு ஏற்ப தரைப்பாலங்களும் உயர்த்தப்படுவதால், வெள்ளக் காலங்களில் மணலிபுதுநகருக்கு இனி பாதிப்பு இருக்காது' என, மாநகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூறினார்.
கடந்த 2015ம் ஆண்டு கொட்டி தீர்த்த பேய் மாரியின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் 90 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கடைமடை பகுதிகளான, விச்சூர், மணலிபுதுநகர், வெள்ளிவாயல், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள், அதேபோல் பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
கரைபுரண்டோடியது
கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் அதிகரிக்கவே, மணலிபுதுநகருக்கு நடுவே, மழைநீர் வெளியேறும் வகையில், பால்பூத் - மகாலட்சுமி நகர் வரை இருந்த, 1 கி.மீ., துாரமுடைய சி.எம்.டி.ஏ., கால்வாயில் கரைபுரண்டோடிய வெள்ளம், மதகுகள் ஏதும் இல்லாததால் பின்னோக்கி பாய்ந்ததில், மணலி புதுநகர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மணலிபுதுநகர் மூழ்க காரணமான சி.எம்.டி.ஏ., கால்வாயை துார் வாரி இருபுறமும் கரை அமைக்க வேண்டும். கொசஸ்தலை ஆறுடன் இணையும் இடத்தில், எளிதில் திறந்து மூடும் அளவிற்கு, மதகுகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
'ப' வடிவ கால்வாய்
இதைத்தொடர்ந்து, வரும் நாட்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி, 3,220 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி சார்பாக கொசஸ்தலை வடிநில பகுதிகளான, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 768 கி.மீ., துாரத்திற்கு, 40 தொகுப்புகளாக, மழை நீர் வடிகால் பணிகள் துவங்கி நடந்தன.
இதன் ஒரு பகுதியாக, மணலி புதுநகருக்குள் மழை நீர் வெளியேறும் வகையிலான, சி.எம்.டி.ஏ., கால்வாய், 1 கி.மீ., துாரத்திற்கு துார் வாரி, 30 அடி அகலம், 7 அடி உயரத்திற்கு, 'ப' வடிவிலான கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டன.
விளைவு, சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது, மணலி புதுநகரில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனிடையே, கான்கிரீட் கால்வாய் உயர்த்தப்பட்ட நிலையில், கால்வாயை கடக்கும் விதமாக ஐந்து இடங்களில் இருந்த, தரைப்பாலங்கள் ஏதும் உயர்த்தப்படவில்லை.
இதன் காரணமாக, கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் உயர்ந்து, தரைப்பாலங்கள் தாழ்ந்து விட்டன. மேலும், கொசஸ்தலை ஆறுடன் இணையும் இடத்தில் மதகுகளும் அமைக்கப்படவில்லை.
செய்தி எதிரொலி
எனவே மதகுகள் இல்லாததால், வெள்ளக்காலத்தின் போது, உபரி நீர் பின்னோக்கி ஊருக்குள் ஏறும், தாழ்வான தரைப்பாலங்களால், வெள்ளநீர் பக்கவாட்டில் வெளியேறி, குடியிருப்புகளை மூழ்கடிக்கக் கூடும் என, நம் நாளிதழில் அடிக்கடி செய்திகள் வெளியாகின.
அதன்படி, கான்கிரீட் கால்வாய் பக்கவாட்டு சுவருடன் தாழ்வாக இருக்கும், ஐந்து தரைப்பாலங்களை உயர்த்தும் பணிகள், தற்போது நடக்கின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணலிபுதுநகர் விநாயகர் கோவில் தெரு மற்றும் 43 பிளாக் - 13வது பிரதான சாலையில் இருக்கும், இரண்டு தரைப்பாலங்களும், கான்கிரீட் கால்வாயின் சுற்றுச்சுவர் உயரத்தை காட்டிலும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன.
விடுபட்ட மூன்று தரைப்பாலங்களும் விரைவில் உயர்த்தப்பட்டு, கொசஸ்தலை ஆறுடன் இணையும் பகுதியில், மதகுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பணிகள் முழுமையாக முடியும் பட்சத்தில், வெள்ளக்காலத்தில் மணலிபுதுநகர் வெள்ள நீரில் மூழ்காமல் தப்பும் என, அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.