அன்னூர்:தீவன விலை உயர்வால், பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் கண்ணீருடன் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயத்திற்கு பருவமழை போதுமான அளவு இல்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே விவசாயத்தில் உப தொழிலாக கறவை மாடு வளர்ப்பு இருக்கிறது.
கண்ணீருடன் புகார்
அன்னூர் தாலுகாவில் உள்ள அன்னூர், கோவில்பாளையம், இடிகரை ஆகிய மூன்று பேரூராட்சிகள், 28 ஊராட்சிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன. இவற்றை வளர்ப்போர் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் சப்ளை செய்து வருகின்றனர்.
தற்போது ஆவின் நிறுவனத்தில் சராசரியாக ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 33 ரூபாய் வழங்கப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 36 முதல் 40 ரூபாய் வரை வழங்குகின்றன. இந்நிலையில் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என கண்ணீருடன் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பிள்ளையப்பம்பாளையம் பகுதி கறவை மாடு வளர்ப்போர் கூறியதாவது :
மாடுகளுக்கான தீவனம் 50 கிலோ மூட்டை நான்கு மாதங்களுக்கு முன்பு வரை 810 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது அதன் விலை 1130 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. பருத்தி புண்ணாக்கு 1600 ரூபாய் இருந்த 60 கிலோ மூட்டை தற்போது 2,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 50 கிலோ தவிடு மூட்டை 400 ரூபாயிலிருந்து 780 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 50 கிலோ மூட்டை 900 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மிச்சமாவதில்லை
மாடுகளுக்கு வழங்கும் தீவனம் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. இத்துடன் அம்மை உள்ளிட்ட சில நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. தடுப்பூசி போட வேண்டி உள்ளது. பால் கறப்பது குறைகிறது.
ஆனால் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு வெறும் 33 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ஒரு மாத செலவு கணக்கு பார்த்தால் ஒரு ரூபாய் கூட மிச்சமாவதில்லை. எனவே பலரும் மாடுகளை விற்க யோசித்து வருகின்றனர்.
அரசு உடனடியாக கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு 42 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும். எருமை பாலுக்கு 52 ரூபாய் தர வேண்டும். இத்துடன் மானிய விலையில் பசுந் தீவனம் வழங்க வேண்டும். மாடுகளுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து இறப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும்.
கறவை மாடுகள் உள்ள தோட்டங்களுக்கு சென்று கோமாரி நோய் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம் ஆகியவற்றை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் கறவை மாடு வளர்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.
இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.