சென்னை: ஆலந்துாரில் நடந்த,'திராவிடர் முதல்வர் மாரத்தான்' போட்டியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2,000க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று அசத்தினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளைத் தொடர்ந்து, 'திராவிடர் முதல்வர் மாரத்தான் - 2023' என்ற தலைப்பில், சென்னை ஆலந்துாரில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியை, சிறு, குறுதொழில் துறை அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., கழக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு போட்டி ஏற்பாட்டாளரான, தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும், செங்கை - காஞ்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலருமான கோல்டு டி.பிரகாஷ், நினைவு பரிசுகள் வழங்கினார்.
போட்டிகள் ஐந்து மற்றும் 10 கி.மீ.,க்கான இரு பிரிவுகளில் நடந்தன.
இதில் 10 கி.மீ., போட்டி, ஆலந்துார் நீதிமன்றம் அருகில் துவங்கி, பழவந்தாங்கல் வழியாக, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் சென்று, மீண்டும் ஆலந்துார் நீதிமன்றம் அருகில் நிறைவடைந்தது.
அதேபோல் 5 கி.மீ., போட்டி, ஆலந்துார் நீதிமன்றம் அருகில் துவங்கி, ஆதம்பாக்கம் போலீஸ் பூத் வரை சென்று, மீண்டும் நீதிமன்றம் அருகில் நிறைவடைந்தது.
போட்டிகளில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 2,000க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று அசத்தினர்
இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு, அமைச்சர் அன்பரசன் தங்க நாணயங்கள் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார்.
Advertisement