கோவை:கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 'சி.டி.எப்.ஏ., கோவைப்புதுார் பிரண்ட்ஸ் கோப்பைக்கான' மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டி நடந்தது.
கோவைப்புதுார், பிஷப் அம்புரோஸ் கல்லுாரி உள்ளிட்ட மைதானங்களில் நடந்த போட்டியில், ஒன்பது அணிகள் லீக் முறையில் போட்டியிட்டன.
இதில், இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற (ஏழுக்கு ஏழு வெற்றி) டிரெண்டி இன்ஜி., எப்.சி., அணியும், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத (ஆறு வெற்றி, ஒரு டிரா) அத்யாயனா எப்.சி., அணியும் இறுதிப்போட்டியில், சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிட்டன. இப்போட்டி, கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் நடந்தது.
பரபரப்பான இந்த இறுதிப்போட்டி, துவங்கிய 10வது நிமிடத்தில் டிரெண்டி அணியின் பிரெடி ஒரு கோல் அடித்தார். அதை தொடர்ந்து, அணியின் விக்ரம் 28வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க, டிரெண்டி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பதிலுக்கு அத்யாயனா அணியின் ஜெயசூர்யா, 35வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து, 46வது நிமிடத்தில் விக்ரம் தனது இரண்டாவது கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் டிரெண்டி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, போலீஸ்உதவி கமிஷனர் ரகுபதிராஜா பரிசுகளை வழங்கினார்.
கோவை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் (போ) அனில் குமார், அத்யாயனா பள்ளியின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'பி' டிவிஷன் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த டிரெண்டி மற்றும் அத்யாயனா அணி, அடுத்த ஆண்டு 'ஏ' டிவிஷனுக்கு முன்னேறின.
இதேபால், கடைசி இரண்டு இடங்களை பிடித்த, வேணு எப்.சி., மற்றும் நியூ வீனஸ் எப்.சி., அணிகள், அடுத்த ஆண்டு 'சி' டிவிஷன் போட்டியில் பங்கேற்கும்.