கோவை:யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் (யு.ஐ.டி.,) முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில், முதலாம் ஆண்டு 'யு.ஐ.டி., அலுமினி' டிராபிக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யு.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
போட்டியில் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதிப்போட்டியில், நாமக்கல் பாவை கல்லுாரி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் யு.ஐ. டி., முன்னாள் மாணவர்கள் அணியையும், இரண்டாவது அரையிறுதியில், பி.எஸ்.ஜி., டெக் மற்றும் பி.பி.ஜி., டெக் இடையேயான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தொடர்ந்து நடந்த, 'பெனால்டி ஸ்ட்ரோக்' முறையில், பி.பி.ஜி., அணி, 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பாவை கல்லுாரி அணி, முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது. தொடர்ந்து, விட்டுக்கொடுக்காமல் போராடிய பி.பி.ஜி., கல்லுாரி மாணவர்கள், கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, 1 - 1 என்ற கணக்கில், போட்டியை டிரா செய்தது.
வெற்றியை தீர்மானிக்க, ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில், பாவை கல்லுாரி அணி, 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, யு.ஐ.டி., கல்லுாரியின் முன்னாள் உடற்கல்வித்துறை இயக்குனர் உதயகுமார் மற்றும் பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் சோமசுந்தரமூர்த்தி பரிசுகளை வழங்கினர். யு.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.