எனக்கு வந்த ஓய்வூதியப் பலனில், 10 லட்சம் ரூபாயை, ஓய்வூதியத் திட்டம் ஒன்றில் போட்டுவிட்டார் நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர். மாதம் 4,400 ரூபாய் வருகிறது. போட்ட பணத்தை எடுக்க முடியாதாம். எனக்குப் பின், என் பிள்ளைகளுக்கு அந்தப் பணம் வரும் என்கிறார். என்னைக் கேட்காமலேயே இப்படி செய்துவிட்டார். இந்தப் பணத்தைப் பெறுவது எப்படி?
பழனி, மதுரை.
உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பணத்தை ஓய்வூதியத் திட்டத்தில் வங்கி மேலாளர் போட்டு விட்டார் என்பதை, எந்த கோர்ட்டுக்குப் போனாலும் உங்களால் நிரூபிக்க முடியாது. உங்கள் கையெழுத்து பெறப்பட்டே இந்த முதலீடு நடந்திருக்கும்.
நீங்கள் குறிப்பிடுவது 'சிங்கிள் பிரீமியம்' ஓய்வூதியத் திட்டம் என்று நினைக்கிறேன். சரண்டர் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும். வங்கியிலேயே போய் கேட்டுப் பாருங்கள். குறிப்பிட்ட தொகையை அவர்கள் பிடித்தம் செய்துகொள்ளக் கூடும்.
விபரங்களை முழுமையாகக் கேட்டுக்கொள்ளாமல் போனது யார் தவறு? மீண்டும், மீண்டும் சொல்கிறேன், இது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்.
நமக்கு எழும் மிக சாதாரணமாக சந்தேகமாக இருந்தாலும் கூட, தயங்காமல் அவற்றை எல்லாம் கேட்டு தெளிவுபெற்ற பின்னர், முதலீடு செய்யுங்கள்.
எல்.ஐ.சி., காப்பீடு தற்போது உள்ள காலகட்டத்தில் எடுக்கலாமா? பாதுகாப்பானதா?
இளங்கோ, வாட்ஸ் ஆப்.
நீங்கள் சமூக வலைதளங்களையும், வாட்ஸ் ஆப் பூச்சாண்டி செய்திகளையும் பார்க்கிறீர்கள் என்று உங்கள் கேள்வியே சொல்கிறது.
எல்.ஐ.சி., இன்று நேற்றல்ல, 1956லேயே தேசியமயமாக்கப்பட்ட நிறுவனம். சொத்து மதிப்பு 4.25 லட்சம் கோடி ரூபாய்.
ஒரே ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்த கடனால், மாபெரும் நிறுவனம் சரிந்துபோகும் என்றெல்லாம் சொல்லப்படுவது வெறும் கற்பனை. இன்னொரு அம்சத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இன்று எல்.ஐ.சி., மட்டுமல்ல; எண்ணற்ற நிறுவனங்கள், காப்பீடு வசதியை வழங்கி வருகின்றன.
இவையெல்லாம் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை. அதனால், எந்தக் காப்பீட்டு நிறுவனமும் திவாலாக முடியாது. வாடிக்கையாளர்களுடைய பணமும் பறிபோகாது. உங்களுக்கு உகந்த திட்டம் எது என்பதில் கவனம் செலுத்தி, தேர்வு செய்யுங்கள்.
நான் ஒரு பொதுத் துறை வங்கியில் கணக்கு துவங்கினேன். அதில் கொஞ்சம் பணமும் போட்டு வைத்திருந்தேன். அதன் பின் பல்வேறு ஊர்களுக்கு மாறுதல் கிடைத்து நகர்ந்து விட்டேன். அந்த வங்கிக் கணக்கோ, இதர விபரங்களோ ஞாபகமில்லை. அந்தக் கணக்கைப் புதுப்பிக்க முடியுமா? அதில் உள்ள பணம், வட்டியோடு கிடைக்குமா?
டி. ஜோசப், வாட்ஸ் ஆப்.
புதுப்பிக்கலாம். அதே வங்கிக் கிளைக்குப் போய், உங்கள் பெயர் மற்றும் வீட்டு விலாசத்தைக் கொடுத்து வங்கிக் கணக்கு எண்ணைத் தேடச் சொல்லுங்கள்.
பெரும்பாலும், அது 'இன் ஆப்பரேடிவ்' என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கும். மீண்டும் உங்கள் ஆதார், வீட்டு முகவரி சான்று, கையெழுத்து உள்ளிட்ட அம்சங்களைக் கேட்பர்.
அவற்றைச் சரி பார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு செயல்படத் துவங்கும். அதில் உள்ள தொகைக்கு சேமிப்புக் கணக்குக்கு என்ன வட்டி உள்ளதோ, அந்த வட்டி வழங்கப்படும்.
முதல் மூன்று காலாண்டுகளில் ' அட்வான்ஸ் ' வரி கட்டவில்லை. இப்போது, நான்காம் காலாண்டில் அட்வான்ஸ் வரி கட்ட போகும்போது, அட்வான்ஸ் வரி கட்டாததற்கு வட்டி போடுவரா?
ரஞ்சனி, வாட்ஸ் ஆப்.
ஆம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31க்கு முன்னர் உங்கள் மொத்த வரிகளில் 90 சதவீதத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை கட்டவில்லை என்றால், எவ்வளவு அட்வான்ஸ் வரி கட்டவேண்டுமோ, அந்தத் தொகைக்கு மாதம் ஒரு சதவீதம் வீதம் வட்டி விதிக்கப்படும்.
என் கணவர் தவறிவிட்டார். அவரது பான் அட்டையை நான் சரண்டர் செய்ய வேண்டுமா?
சந்திரிகா ஸ்ரீனிவாசன்,
வாட்ஸ் ஆப்
ஆம். கண்டிப்பாகச் செய்யவேண்டும். அதற்கு முன்னர், உங்கள் கணவர் வருமான வரி ஏதேனும் செலுத்த வேண்டி இருந்தால், அதைச் செலுத்த வேண்டும். அவர் மறைந்த நிதியாண்டிலேயே இதைச் செலுத்தியிருக்க வேண்டும்.
தற்போது அதற்கு, வருமான வரித் துறை, அவர் செலுத்த வேண்டிய தொகை மீது 50 சதவீதம் வரைஅபராதம் விதிக்கக்கூடும்.
வரியைச் செலுத்திய பின்னர், பான் அட்டையை வருமான வரித் துறை அதிகாரியிடம் திருப்பிக் கொடுப்பதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதை நேரில் போய்த் தான் செய்ய வேண்டும், ஆன்லைனில் இதற்கான வசதி இல்லை.
'சிலிகான் வேலி வங்கி'யில் என்ன நடந்தது? ஏன் திவால் ஆனது?
ஆர். பார்த்தசாரதி,
சென்னை.
அமெரிக்காவில் நம்ம ஊர் மாதிரி இல்லை. கடன் பத்திர சந்தை என்பது மிக மிக பிரபலம். அதுவும், அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் தான் தனிநபர்களும், வங்கிகளும், நிறுவனங்களும் முதலீடு செய்யும்.
அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவுல், கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தில் இருந்த வட்டி விகிதத்தை 4.50 சதவீதம் வரை உயர்த்தியதில், கடன் பத்திரங்களின் மதிப்பு கடும் சரிவைக் கண்டது.
ஒருபக்கம் சிலிகான் வேலி வங்கியில் பணம் போட்ட பெருமுதலீட்டாளர்கள், அவசர அவசரமாக பணத்தை எடுப்பதற்கு முண்டியடித்தனர்.
இன்னொரு பக்கம், கடன் பத்திர மதிப்பு வீழ்ச்சியைச் சமாளிக்க, அந்த வங்கி, தன் பங்குகளைப் பங்குச் சந்தையில் பெருமளவு இறக்கத் துவங்கியது. வங்கி வீழ்ச்சிக்கு இது போதாதா?
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph98410 53881