காசிமேடு: காசிமேடு, பவர் குப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், 64 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கட்டடம் கட்டி, 25 ஆண்டுகளாகின்றன.
ஆனால், முறையான பராமரிப்பின்றி, மிகவும் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளித்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கட்டடத்தை ஆய்வு செய்ததில், காசிமேடு கடற்கரைக்கு அருகில் இருப்பதால், கட்டடம் மிகவும் பழுதடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பழைய குடியிருப்புகளை இடித்து, புது கட்டடம் கட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. இதற்கான கட்டட பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இரண்டு ஆண்டுக்குள் கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கு வசித்த 64 குடும்பங்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடு ஆவணங்கள், 24 ஆயிரம் ரூபாய் கருணை தொகையை, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் வழங்கினர்.