ஜல்லடையன்பேட்டை: தாம்பரம் -- -வேளச்சேரி பிரதான சாலையில், மேடவாக்கம் அடுத்த ஜல்லடையன்பேட்டையில், தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து, பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
வணிக வளாகத்தின் முன் பகுதியில், 15 அடி அகலம், 30 அடி நீளமுள்ள அணுகு சாலை உள்ளது.
இந்த சாலையை ஆக்கிரமித்து, வணிக வளாகத்துக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
தவிர, அணுகு சாலையை தாண்டி, பிரதான சாலையின் ஒரு பகுதியையும் வணிக வளாகத்தினர் தங்களுக்கான வாகன நிறுத்தமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகம் நடந்து வருகின்றன.
இது குறித்து, காவல் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், இதில் கவனம் செலுத்தி, அணுகுசாலையை மக்கள் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வரவேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.
Advertisement