அனுப்பர்பாளையம்:திருப்பூர் 25வது வார்டு சிறு பூலுவப்பட்டியில் இருந்து, காவிலிபாளையம் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்தது. பணி முடிந்து சாலை சீர்செய்யப்படாததால் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''இந்த வழியாக இயங்கிய 39, 1-பி, ஆகிய இரண்டு அரசு டவுன் பஸ்கள், பாதாள சாக்கடை பணியால் நிறுத்தப்பட்டன. தற்போது பணி முடிந்தும், ரோடு சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. மழை நேரங்களில் ரோடு சேறும் சகதியுமாகி விடுகிறது. இதனால், பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
காவிலிபாளையம், காவிலிபாளையம்புதுார் ஆகிய பகுதியில் இருந்து சிறு பூலுவப்பட்டி பள்ளியில் அதிக மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏராளமான தொழிலாளர்கள் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பஸ் வசதி இல்லாததால், சிறு பூலுவபட்டிக்கு 2 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அல்லது, ஆட்டோவுக்கு அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. ரோடு சீரமைத்து, பஸ் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்'' என்றனர்.