அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ் நேற்று தனது 32வது வார்டு பொதுமக்களை வீடு, வீடாக சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அம்பேத்கர் நகர் பகுதி மக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க கேட்டு கொண்டார். ''இப்பகுதியில் 12 பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் இணைப்பு இல்லை. கொடுத்தால், நன்றாக இருக்கும்'' என்றனர் இப்பகுதியினர்.
''வீட்டு வரி செலுத்தி, கடிதம் கொடுத்தால் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும்'' என்று கோவிந்தராஜ் உறுதியளித்தார். டி.பி.ஏ., காலனி மக்கள், ''குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடை துார் வார ஆட்கள் வருவதில்லை'' என்று முறையிட்டனர்.
துப்புரவு ஊழியர்களை வரவழைத்து உடனடியாக சாக்கடை கால்வாய் துார் வார நடவடிக்கை எடுத்தார். ''நான்காவது குடிநீர் திட்டம் அமலானதும் குடிநீர் வினியோகிக்கப்படும்'' என்று கோவிந்தராஜ் உறுதி கூறினார்.