வடக்கு கடற்கரை: சென்னை, பாரிமுனை, தம்பு செட்டி தெருவில் வடக்கு கடற்கரை போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது பையை சோதனையிட்டனர்.
அதில் 'மெத்தம்பெட்டமைன்' போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், ஏழு கிணறு, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ், 30, மண்ணடி, மரக்கையர் லெப்பை தெருவை சேர்ந்த பஷீர் அகமது, 24, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த மொய்தீன் சைபுல்லா, 38, என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 25 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், மூன்று பைக்குகள் மற்றும் 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.