திருவல்லிக்கேணி: தேனாம்பேட்டை மண்டலம், திருவல்லிக்கேணியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள முத்தையால் தெருவில், 2021 டிசம்பரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி துவங்கியது.
700.94 ச.மீ., பரப்பளவில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையம், 3.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீதம், இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இரு மாதங்களில், சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அனைத்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.