சென்னை: சென்னை பெரு நகர காவல் துறை சார்பில், ஐந்து புது திட்டங்கள் துவக்கப்பட உள்ளன.
இது குறித்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:
அடையாறு, பெசன்ட் நகர் அவென்யூவில், 'ட்ரோன்' போலீஸ் அலகு துவக்கப்பட உள்ளது. இவற்றில், பல வகையான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள், சர்வரில் உள்ள பழைய குற்றவாளிகளை எளிதாக காட்டி கொடுக்கும்.
இரவில், கடல் அலைகளில் சிக்குவோரை அடையாளம் காண்வது எளிதாகும். திருவிழா கூட்டங்களில் நடக்கும் திருட்டை தடுக்க உதவும்.
சரித்திர பதிவேடு ரவுடிகளின் பதிவை புதுப்பிக்க, 'பருந்து' என்ற செயலியை உருவாக்கி, டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை உருவாக்க, 32.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருட்டு வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி, 1.81 கோடி ரூபாயில் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாலையிலும், கடற்கரையிலும் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக 78.63 லட்சம் ரூபாயில், நான்கு 'பீச் பகி' வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து, கடினமான காவல் பணியை செய்கின்றனர்.
அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, 'ரோல் கால்' எனும் காவல் வருகை அணிவகுப்பு, காலை 7:00 மணிக்கு பதில், 8:00 மணிக்கு நடக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தும் விதமாக, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.