கோவை:மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை அருகே பிளிச்சி கிராமத்தில் புதிய மத்திய சிறைச்சாலை கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையை இடம் மாற்றிய பின், அங்கு செம்மொழி பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிறை அமையும் புதிய இடத்தை, உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆய்வு செய்தார். அதில் சிறை வளாகம் அமைவது உறுதி செய்யப்பட்டது.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சிறை வளாகம் மாற்றத்திற்கு முன்பே, செம்மொழிப் பூங்கா பணிகள் தொடங்கப்படும்.
இதனால் தினமும் கட்டட பணியாளர்கள் வந்து செல்வார்கள் என்பதால், சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சிறை வளாகம் அமையவுள்ளதால்,காரமடை -- கோவில்பாளையம் சாலை இணைப்புக்காக மேலும், 5 ஏக்கரை கையகப்படுத்துமாறு வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.