ராமாபுரம்: ராமாபுரம் காமராஜர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு நெசப்பாக்கத்தில், காமராஜர் சாலை உள்ளது. இது, ராமாபுரம் மற்றும் நெசப்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இச்சாலை வழியாக தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை, வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களின் எல்லைப் பகுதியில் வருகிறது.
இதில், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ராமாபுரம் திருவள்ளுவர் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பு அருகே, சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. நடைபாதை வசதி இல்லாத காரணத்தால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. அந்த நேரத்தில், அவர்கள் விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட காமராஜர் சாலை அல்லது ராமாபுரம் பிரதான சாலையிலும் பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. எனவே, சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.