திருப்பூர்:'பீக் ஹவர்' மின்கட்டண விலக்கு, புதிய ஜவுளி மண்ட லம், பின்னலாடை ஏற்றுமதி ஆராய்ச்சி மையம் என, பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், திருப்பூர் தொழில்துறையினர், தமிழக அரசு பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவியபோது, பல்வேறு தொழில் நகரங்கள் முடங்கிய போதும், முககவசம் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு ஆடைகள் தயாரிப்பில், திருப்பூர் தொழில்துறையினர் கவனம் செலுத்தினர்.
ஏற்றுமதி வர்த்தகமும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மற்றும் வியாபாரம் வெகு விரைவில் இயல்புநிலை திரும்பியது. கொரோனாவை சாமாளித்த திருப்பூரை, பஞ்சு - நுால்விலை உயர்வு பிரச்னை புரட்டிப்போட்டது.
பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும், வியாபாரமும் சகஜநிலைக்கு திரும்பவில்லை. ஜி.எஸ்.டி., விதிப்பு, வங்கதேச ஆடைகள் இறக்குமதி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற காரணங்களால், உள்நாட்டு வர்த்தகம் சோர்ந்து போயுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படும், தமிழக அரசின், (2023-24) பட்ஜெட்டில், திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளருக்கான திட்டங்கள் இடம்பெறுமா என, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆராய்ச்சி மையம்
திருப்பூர் மீது சிறப்பு கவனம் செலுத்தும் தமிழக அரசு, பின்னலாடை ஏற்றுமதி மையம், 10 கோடி ரூபாயில் அமைக்கப்படுமென அறிவித்தது.ஐ.கே.எப்., வளாகத்தில், 30 சென்ட் பரப்பளவில், ஏற்றுமதி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பின்னலாடை ஏற்றுமதி தொழில்துறை வளர்ச்சிக்கு, மேலும் 10 கோடி ரூபாய் ஒதுக்கி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செயற்கை நுாலிழை தொழில்நுட்பம்
பருத்தி ஆடையை மட்டுமே நம்பியுள்ள திருப்பூர் நகரம், செயற்கை நுாலிழை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகர முடியும்.
திருப்பூர் பின்னலாடை தொழில், 'அப்டேட்' ஆக, தேவையான திட்டங்களை கேட்டறிந்து, மத்திய அரசு வாயிலாகவும், மாநில அரசு வாயிலாகவும் செயல்படுத்த, சிறப்பு தொழில்நுட்ப குழு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மத்திய அரசு சிறப்பு நிதி
கோவை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். முக்கிய நகரங்களை இணைக்கும் ரோடுகளில், உயர்மட்ட பாலம் அமைத்து, நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
திருப்பூர் உள்கட்டமைப்பு வசதிக்கு, மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்று, கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தலாம்.
வடமாநிலதொழிலாளர்கள்
திருப்பூர் பின்னலாடை தொழிலில் மட்டும், வடமாநில தொழிலாளர்கள், இரண்டு லட்சம் பேர் இருக்கின்றனர். பாதுகாப்பாக தங்கியிருக்க வசதியாக, வீட்டுவசதி வாரியம் மூலம், தொழிலாளர் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு நிதியுதவியை பெற்று, சிறிய அளவிலான அறைகளுடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
மின் கட்டண விலக்கு
விசைத்தறி மின் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கியது போல், பனியன் தொழி லில் மற்றும் 'ஜாப் ஒர்க்' தொழில்களுக்கும், மின் கட்டணம் அல்லது நிலை கட்டண சலுகை, 'பீக் ஹவர்' கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கும் அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம் பெறுமா என, ஒட்டுமொத்த திருப்பூரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இளைஞர், பெண்கள் வேலைவாய்ப்பு
ஜவுளி மண்டலங்கள் உருவாகட்டும்
திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள், நன்கு வேலை பழகியதும், பின்னலாடை தொழில் வேறு மாநிலங்களுக்கு நகரவும் வாய்ப்புள்ளது. வெளிமாநில அரசுகள், மானியம் மற்றும் சலுகை அளித்து, பின்னலாடை தொழிலை துவக்கினால், தொழில் வாய்ப்புகள் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. முழுமையாக வெளிமாநில தொழிலாளரை மட்டுமே நம்பியிருக்காமல், பின்தங்கிய மாவட்டங்களில், ஜவுளி மண்டலங்கள் அமைத்து, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு திட்டமிட வேண்டும்.
திருப்பூரை பொறுத்தவரை, உற்பத்தி பிரிவில்தான், ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. திருப்பூரிலேயே துணியை வாங்கி, 'கட்டிங்' செய்து, கேரளாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன. இதற்கு இடமளிக்காத வகையில், பின்தங்கிய மாவட்டங்களில், ஜவுளி மண்டலம் அமைத்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் என்பது, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.