திருப்பூர்;வரும் 22ம் தேதி துவங்க உள்ள பின்னலாடை கண்காட்சி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி என்ற புதிய பாதையை நோக்கி, திருப்பூரைப் பயணிக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் (ஐ.கே.எப்.,), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்(ஏ.இ.பி.சி.,) சார்பில், ஆண்டுக்கு இருமுறை, ஜவுளி தொழில்நுட்பத்தை பரவலாக்கும் வகையில், இந்தியா சர்வதேச பின்னலாடைக் கண்காட்சியை நடத்துகிறது. வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் திருமுருகன்பூண்டியில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில் நடைபெற உள்ள 49வது கண்காட்சியை வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமையினர், வர்த்தக நிறுவனத்தினர் பார்வையிட உள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த, 60க்கும் அதிகமான நிறுவனங்கள், பின்னலாடைகளைக் காட்சிப்படுத்த உள்ளன. இம்முறை, நாடு முழுவதும், செயற்கை நுாலிழை துணிகளை சப்ளை செய்யும் நிறுவனங்களும், 'பேப்ரிக்' ரகங்களை கண்காட்சிக்கு வைக்க உள்ளன. முழுவதும், செயற்கை நுாலிழை தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக அமைய உள்ளது. முன்னணி நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள் மூலம், வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மாலை 4:00 மணிக்கு, தொழில்நுட்ப கருத்தரங்கு நடக்க உள்ளது.
முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி செய்த செயற்கை நுாலிழை ஆடைகளை காட்சிப்படுத்தும் வகையில், இவ்விரு நாட்களும், மாலை, 6:00 மணிக்கு, 'பேஷன் ேஷா' நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும், செயற்கை நுாலிழை ஜவுளி உற்பத்திக்கு மாறி வரும் சூழலில் நடக்க உள்ள, 'இந்தியா நிட்பேர்', திருப்பூருக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.கே.எப்., சங்க செயலாளர் பிரேமல் உதானி கூறுகையில், ''ஜவுளித்தொழில் முற்றிலும் மாறுபட்ட வகையில், புதிய பாதையில் பயணிக்கப்போகிறது. இந்தியா, செயற்கை நுாலிழை ஆடை வர்த்தகத்தில் பின்தங்கியுள்ளது. உலக அளவில், பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறோம். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டியது காலத்தில் கட்டாயம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சோலார், கழிவுநீர் சுத்திகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு என, முன்னோடியாக இருக்கிறோம். உலக அளவில், 'யூஸ் அண்ட் த்ரோ' கலாச்சாரம் பரவியுள்ளது; இந்தியாவில் உள்ள, நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகள், சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.
*
அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தகர்கள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''பின்னலாடை வர்த்தகத்தில், திருப்பூர் உச்சத்தில் இருக்கிறது; புதிய சவால்களை எதிர்கொண்டு, செயற்கை நுாலிழை ஆடைக்கு மாறினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய முடியும்; திருப்பூர் பின்னலாடை தொழில் புத்தாக்கம் பெறும். செயற்கை நுாலிழை உற்பத்திக்கு மாறுவதற்கு, 49வது 'இந்தியா நிட்பேர்' கண்காட்சி பக்கபலமாக இருக்கும்,'' என்றார்.*