நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
கோவை ஒண்டிப்புதூர் நாகையன் தோட்டம் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், 37; தனியார் நிறுவன ஊழியர்.இவரது தந்தை ராமதாஸ் தோட்டத்திற்கும், விஜயகுமார் பணிக்கும் சென்று விட்டனர். தாயாரும் வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பணி முடிந்து விஜயகுமார் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் திருடு போயிருந்தது. சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கோவை ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 37; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் பெரிய கடை வீதியை அடுத்த ராமர் கோவில் வீதியில், ஒரு கட்டடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.அங்கு இரும்பு கம்பிகளை எடுத்துச் சென்றார். அப்போது இரும்பு கம்பிகள் மின் கம்பத்தில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில்குமார், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து, பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத,ராமநாதபுரம் மணியக்காரர் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், 29, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
கோவையைச் சேர்ந்த 15 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.
அதில் சிறுமி தனது உறவினரான, 17 வயது சிறுவனும், தானும் காதலித்து வந்ததாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். கிழக்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.