வானகரம்: போரூர் சுங்கச்சாவடி செல்லும் பிரதான சாலையான வானகரம், சமயபுரம் சாலையில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, மதுரவாயல் - -தாம்பரம் பைபாஸ் சாலையில், 2 கி.மீ., தொலைவில், சுங்கச்சாவடிக்கு முன்பாக பிரிந்து செல்கிறது, சமயபுரம் பிரதான சாலை.
ஒரு கி.மீ., துாரத்திற்குச் செல்லும் இந்த சாலை, போரூர் - -கிண்டி சாலையில், போரூர் ஏரிக்கு எதிராக முடிவடைகிறது.
இந்த சாலையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் மற்றும் வானகரம் ஊராட்சி எல்லைகள் இச்சாலையில் அடங்கும்.
இதில், வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சமயபுரம் 7வது குறுக்கு தெரு அருகே, சமயபுரம் பிரதான சாலையில், மின் மாற்றி அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், குப்பை அருகே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், மழை நீருடன் குப்பை கலந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பையில் உள்ள கழிவுகளை உண்ண வரும் பசு மாடுகளால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் உள்ள குப்பையை முறையாக அப்புறப்படுத்தி, மீண்டும் அந்த இடத்தில் குப்பை சேகரமாகாமல் இருக்க, வானகரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.